கிருஷ்ணகிரி அருகே இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற பெண் ஒருவரைச் சித்திரவதை செய்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் மீது புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகியின் அட்டூழியத்தால் சித்ரவதைக்கு உள்ளாகி வரும் ஆதரவற்ற பெண் குறித்தும் அவர் படும் துயரங்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தமிழ்செல்விக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் தமிழ்செல்வி அருகில் இருக்கும் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று குழந்தைகளின் பசியை போக்குவதோடு படிக்கவும் வைத்து வருகிறார். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வசித்து வந்த கூரை வீட்டிற்கு மின்சார வசதி கேட்டு தமிழ்செல்வி அளித்த மனு கூரை வீடு என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜூஸ் கம்பெனி மட்டுமல்லாது பக்கத்து வீட்டிற்கும் வேலைக்குச் சென்று சேர்த்த பணத்தில் தகர வீடு ஒன்றைக் கட்டி முடித்த தமிழ் செல்வி, அதற்கு மின்சார வசதி கேட்டு கோரிக்கை வைத்த போது பட்டா இருந்தால் தான் மின்சார வழங்க முடியும் என அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். பட்டாவை வழங்க உதவுமாறு மனு கொடுக்க வந்த தமிழ்செல்வியை தன் வீட்டிற்கு வந்து வேலை செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலையின் கணவருமும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான தட்டரஹள்ளி நாகராஜ் நாகராஜன் கட்டாயப்படுத்தியுள்ளார்.
தமது வீட்டிற்கு வேலைக்கு வந்தால் உதவி செய்கிறேன் என மீண்டும் மீண்டும் நாகராஜ், தமிழ்செல்வியை வற்புறுத்தியுள்ளார். உங்கள் வீட்டில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தம்மால் குழந்தைகளைப் பார்க்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்த தமிழ் செல்வியை நாகராஜ் மிரட்டத் தொடங்கியுள்ளார். என் வீட்டிற்கு வேலைக்கு வராத நீ எப்படி நிம்மதியாக வாழ முடியும் எனச் சவால்விட்ட நாகராஜ், தமிழ்செல்வி இல்லத்தின் முன்பாக அடியாட்களை வைத்து மதுபான பாட்டில்களை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திமுக அவைத் தலைவர் நாகராஜின் அடியாட்களிடமிருந்து தமது குழந்தைகளைப் பாதுகாக்கப் பகலில் வேலைக்குச் சென்று வந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டே இருப்பதாக தமிழ்செல்வி கண்ணீர் வடிக்கிறார். இரவுபகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற ஆதரவற்ற பெண் ஒருவரை திமுக பிரமுகர் நாகராஜ் நடத்தியிருக்கும் விதம் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.