2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி சீனா செல்கிறார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் சீன பயணம், புவி சார் அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற சில நாட்களில், ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த முதல் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். பிரதமர் மோடி தமது நண்பர் என்று கூறிய ட்ரம்ப், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசு ரீதியாக அல்லாமல் வியாபார ரீதியாகவே கணக்குப் போடும் ட்ரம்ப், இந்தியாவுடன் உரசலை ஏற்படுத்தி, வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்ய விடாமல் தடுத்திருக்கிறார். இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ள ட்ரம்ப், சீனா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பில் இருப்பதால் கூடுதலாக இந்தியா மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய விவசாயிகள் நலனே தனக்கு முக்கியம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனில் நாடு ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்றும் உறுதிப் படக் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்திற்குச் சவால் விடும் பிரிக்ஸ் நாடுகளை ட்ரம்ப் குறிவைத்துத் தாக்கும் நிலையில், சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர். தொடர்ந்து,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த ஜூன் மாதம், நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாத நிலையில், பலுசிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்ததால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப் படவில்லை.
கடந்த ஜூலை மாதம், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லக்ஷர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான TRF-யை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைச் சீனா கடுமையாகக் கண்டித்துள்ளது.
அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உறுதியாக எதிர்க்கும் சீனா,பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலையும் கடுமையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கூட்டாகப் பராமரிக்கவும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து பணியாற்றச் சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சீனப் பயணம், இருநாடுகளுக்குமான உறவை மேம்படுத்துவதோடு,புவிசார் அரசியல் களத்தையே இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.