இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நிலவு குறித்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என்ற 3 விண்கலன்களை இந்தியா இதுவரை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் அதன் ஆர்ப்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து நிலவு குறித்த முக்கிய தகவல்களை அது பூமிக்கு அனுப்பி வருகிறது.
நிலவு பூமிக்கு அருகில் வரும்போது, அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதைச் சந்திரயான்-2 விண்கலம்தான் அண்மையில் கண்டுபிடித்தது. இந்த தகவல் மூலம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவிற்குச் செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவின் தரையில் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான புகைப்படத்தைச் சந்திரயான்-2 தற்போது அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம், Intuitive Machines என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு ஒரு லேண்டரை அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில் IM-2 லூனார் என்ற அந்த லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததால் அதனால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை.
மார்ச் 7ம் தேதி அந்த லேண்டர் விபத்துக்குள்ளானது குறித்த சந்திரயான்-2 புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. Orbiter High Resolution Camera-வில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் லேண்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான துல்லியமான பல தகவல்களை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை ஜெர்மனியில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்தும், இத்தகைய பள்ளங்கள் உள்ள பகுதிகளில் லேண்டர்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் இந்த புகைப்படங்கள் புதிய தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,
சந்திரயான்-2 எடுத்த இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.