திருப்பூர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீதமுள்ள இருவர் மீதும், 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, அரசு வாகனத்தைச் சேதப்படுத்துதல், அரசு ஊழியரைத் தாக்கி காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் தலைமறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.