கார் விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த மாதம் 18-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்துள்ளார். கலசபாக்கம் அருகே செல்லும் போது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கலசப்பாக்கம் ஆற்று பாலத்தில் காரை மோதியுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி எதிரே வந்த ஒருவர் இறந்து விட்டார். மேலும் இதுகுறித்து கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன், காரின் ஆவணங்களை சரி பார்த்துள்ளார்.
கார் விபத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சாதிப் பெயரைச் சொல்லியும் சசிகுமாரை, சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் திட்டிய வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உத்தரவிட்டுள்ளார்.