இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவின் பரம எதிரியான பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் இணைந்து நிற்பது தெற்காசியப் புவி அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடாக உள்ளது. 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக விளங்கும் பிலிப்பைன்ஸ், அடிக்கடி சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் ஒரு நாடாக உள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியா-பிலிப்பைன்ஸ், இருநாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் உள்துறை பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வேளாண்மை, சுகாதாரம், மருந்துத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல துறைகளில் வலுவான கூட்டுறவை மேற்கொண்டுள்ளன.
மேலும், இந்தியாவின் ASEAN-உடனான விரிவான மூலதன உறவுத் திட்டம் (Comprehensive Strategic Partnership) வழியாகப் பிராந்திய மட்டத்திலும் பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே, அமெரிக்காவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள உள்ள பிலிப்பைன்ஸ், எந்த நேரத்திலும் அமெரிக்கா நழுவலாம் என்ற நிலையில், இந்தியா தான் நம்பகமான நாடு என்று இந்தியாவுடன் நெருங்கி வந்துள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பிலிப்பைன்ஸ் முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இந்தியாவுடன் இணைந்து பிலிப்பைன்ஸ் முதன்முறையாக தென்சீனக் கடலில் கூட்டுக் கடல் பயிற்சியை நடத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்த விரும்புவதாகவும் பிலிப்பைன்ஸ் தளபதி ஜெனரல் ரோமியோ ப்ராவ்னர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் மீனவர்களையும், பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்களையும் வழக்கமாகத் துன்புறுத்தும் சீனக்கடற்படை ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் நடந்த இந்தப் போர் பயிற்சி சீனாவுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை என்றே பார்க்கப் படுகிறது.
தனது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Akash-1S ஏவுகணையை இந்தியாவிடமிருந்து வாங்க பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது. ஏற்கெனவே, கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலர் மதிப்பில் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய பசிபிக் பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டின் அடிப்படையில் உத்திசார் கூட்டாண்மையை இருநாடுகளும் ஏற்படுத்தியுள்ளன.
காலநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல் போன்ற நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான அடித்தளமாக இது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.