அன்புமணி தலைமையில் இன்று நடக்கவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று கட்சிப் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதியின் அறையில் அன்புமணி நேரில் ஆஜராகினார். உடல்நலக்குறைவு காரணமாக காணொலி மூலம் ராமதாஸ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது, பொதுக்குழுவை கூட்ட கட்சி தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், பாமக நிறுவனர் வழிகாட்டுதல்படி பொதுக்குழு நடத்தப்படும் எனவும் அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கட்சியின் உள்விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.இந்த தீர்ப்பு மூலம் திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.