ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று சூளுரைத்த அதிபர் ட்ரம்ப், வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் ட்ரம்பை சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யா உக்ரைன் போர் நடந்துவருகிறது. போரால் உக்ரைன் பேரழிவுக்கு உள்ளாகி இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுத மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. மேற்கத்திய நாடுகளிடமிருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், பதவிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறிய அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு வந்தவுடன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில், மிகவும் கோபமாக நடந்து கொண்ட அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திவைத்தார்.
கடந்த மே மாதம், ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொலைப்பேசியில் உரையாடினார்கள். அதன்பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக புதின் கூறியதாக ரஷ்ய அரசு தெரிவித்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்க நிபந்தனைகளை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டிருந்தார். அதில்,நேட்டோ உறுப்பினராகும் விருப்பத்தை உக்ரைன் கைவிடவேண்டும் என்றும், ரஷ்யாவுக்கு உரிமையுடைய, நான்கு உக்ரைன் பகுதிகளிலிருந்து, உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கூறப் பட்டிருந்தது.
இதற்கிடையில், இஸ்தான்புல்லில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் போர் கைதிகள் பரிமாற்றம் குறித்துப் பேசப்பட்ட நிலையிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு முன், ரஷ்யாவில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளங்கள் மீது ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப் தாக்குதலை உக்ரைன் நடத்தியது. அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும்,100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, அலாஸ்காவில் புதினை சந்தித்துப் பேச உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும்,ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளும் தங்கள் நிலப்பரப்புகளை மாற்றிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, வாஷிங்டனும் மாஸ்கோவும், ரஷ்யா கைப்பற்றிய அனைத்து உக்ரைன் பிரதேசங்களை ரஷ்யாவுக்கு உரிமையாக்க அனுமதிக்கும் ஒப்பந்தமும் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் அலாஸ்காவில் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது, போர்நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் இருந்து ஜெலன்ஸ்கி விலக்கி வைக்கப் படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. உக்ரைன் போருக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள பாரத பிரதமர் மோடியுடனும் அதிபர் புதின் பேசியுள்ளார்.
ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளை மேம்படுத்தி, உக்ரைன் நெருக்கடிக்கு அரசியல் தீர்வை காண்பதில் சீனா மகிழ்ச்சி அடைகிறது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியதாகச் சீன அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட இதுதான் கடைசி வாய்ப்பா என்று கேள்விக்கு, இந்தப் போர் தொடர்ந்தால் அதை நிறுத்துவது கடினம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அலாஸ்கா சந்திப்புக்கான அழைப்பைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய கிரெம்ளின் மாளிகை, விரைவில், ரஷ்யாவுக்கு வந்து புதினை ட்ரம்ப் சந்திப்பார் என்றும், அதற்கான முறையான அழைப்பு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா மற்றும் ஆர்க்டிக் ஆகியவை ரஷ்யாவின் பொருளாதார நலன்களுக்கான இடமாகும். எனவே தான் இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடக்கிறது என்றும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. 1867ம் ஆண்டு அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.