மலைப் பகுதி போரில் பயன்படுத்தப்பட்டு வரும் Cheetah மற்றும் Chetak ரக ஹெலிகாப்டர்கள் காலாவதி ஆன நிலையில், அவற்றை மாற்ற இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1960களில் இருந்து ராணுவச் சேவையில் இருந்து வரும் பழைய Cheetah மற்றும் Chetak ஹெலிகாப்டர்களை படிப்படியாகக் குறைப்பதற்கான செயல்முறையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
200 நவீன உளவு மற்றும் கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை (RSH) வாங்குவதற்கான டெண்டரை (RFI) இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. இதில், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், கொள்முதல் வழிமுறைகள் மற்றும் விற்பனையாளர்களின் பட்டியலுடன், தனியாகவோ அல்லது வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் கூட்டாகவோ பணிபுரியும் இந்திய நிறுவனங்களின் முன்மொழிவுகள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் வெறும் பறப்பதற்கு மட்டுமல்ல, எல்லை ரோந்து, விரைவான துருப்புக்களை இறக்குதல், மீட்புப் பணிகள் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கையாளப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இரவும் பகலும் இயங்கக் கூடிய இந்த புதிய ஹெலிகாப்டர்கள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு, மட்டுமின்றி, பேரிடர் மீட்புப் பணிகளின் போதும், தேடும் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையில், ரேடார்கள், இலகுரக போர் விமானம் (LCA), இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் (LUH), பல் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நடு-வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை கொள்முதல் செய்வதற்கான திட்டம் கூறப்பட்டிருந்தது.
ஏற்கெனவே, பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, ராணுவம் மற்றும் விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000 கோடி ரூபாய்க்கு 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆர்டர் செய்யப்பட்ட 187 இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுடன் கூடுதலாக 200 நவீன உளவு மற்றும் கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் தயாராகிறது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 2027ம் ஆண்டிலிருந்து, பழைய Cheetah மற்றும் Chetak ஹெலிகாப்டர்கள் ஓய்வு பெறத் தொடங்கும் எனக் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதிலும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் என உள்நாட்டு ஆயுத தளவாட உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.