எக்ஸ் பக்கத்தில் வம்பிழுக்கும் வகையில் கருத்து தெரிவித்த எலான் மஸ்கிற்கு, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா நட்பார்ந்த முறையில் பதிலளித்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் பிறந்தவரான சத்ய நாதெல்லா, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். fortune நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, அதிக சக்தி வாய்ந்த டாப் 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியலில், இவர் 2ம் இடம் பிடித்திருந்தார். ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர்கூட இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தனர்.
அந்த அளவுக்கு, தான் சார்ந்த துறையில் ஜாம்பவானாகவும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்பவராகவும் சத்ய நாதெல்லா விளங்குகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றைப் போட்டிருந்தார். அதில், மைக்ரோசாஃப்டின் அனைத்து தளங்களிலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் GPT-5 அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். Microsoft 365 Copilot, Copilot, GitHub Copilot, Azure AI Foundry உள்ளிட்டவற்றில் இனி GPT-5ஐ பங்களிப்பு இருக்கும் எனவும் கூறினார்.
இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை ஓபன் ஏஐ நிறுவனம் மொத்தமாக விழுங்கப் போகிறது எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த சத்ய நாதெல்லா, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற 50 ஆண்டுகளாகப் பலர் முயன்று வருவதாகவும், இது மிகவும் வேடிக்கையான ஒன்று எனவும் தெரிவித்தார். எலான் மஸ்க் வடிவமைத்து வரும் செயற்கை நுண்ணறிவு தளமான grok-4ஐ மைக்ரோ சாஃப்டின் Azure தளத்தில் பயன்படுத்த ஆவலாக இருப்பதாகவும், grokன் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
சத்யா நாதெல்லாவின் இந்த பதில் மிகவும் முதிர்ச்சியுடன் உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். PRS எண்டர்பிரைசஸின் தலைவரான ஹர்ஸ் கோயங்கா (Harsh Goenka), எலான் மஸ்கிற்கு மாஸ்டர் கிளாஸ் பதிலை சத்ய நாதெல்லா வழங்கியுள்தாக குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்குவம் வாய்ந்த நபரின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், உரையாடலை ஆரோக்கியமான முறையில் அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்வது என்பதற்கும் இந்த பதில் சிறந்த உதாரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மோசமான கருத்துக்கு, நாமும் மோசமான கருத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை சத்ய நாதெல்லாவின் பதில் உணர்த்துவதாக மற்றொரு நபர் கூறியுள்ளார். இந்தியர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று எனவும், தலைமைத்துவம் என்பது ஆணவத்திற்குப் பதிலான கருணையை முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.