ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், இலக்குகளைத் தெறிக்க விடும் திறன் என எல்லையைப் பாதுகாக்க கர்ஜிக்கும் சிங்கங்களாக அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது இந்திய விமானப்படை. இந்தியாவின் இதயமாக விளங்கும் விமானப்படை, ஒவ்வொரு நொடியும் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் என்ற தலையாய பணியையும் சிறம் மேற்கொண்டு செய்து வருகிறது. அதனை விவரிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ஓட்டம்பிடிக்க, 13 நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் என்ற புதிய நாடும் உதயமானது.
ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடத்தப்பட்ட கார்கில் போரில் இந்திய போர் விமானங்கள் வான்வழியாக நடத்திய தாக்குதல்கள், பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணியாக இருந்தது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படை வழியாகத் தாக்கி அழித்தது.இதில் 300 தீவிரவாதிகள் கொன்று குவித்த இந்திய விமானப்படை புல்வாமா தாக்குதலுக்குப் பழிதீர்த்தது.
அதற்குப் பிறகு, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி என 9 தீவிரவாத முகாம்களைத் தகர்த்தது இந்திய விமானப்படை. அதுமட்டுமல்லாமல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு காலங்களில் விமானப்படை முன்வந்து உதவுகிறது. மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட சவாலான பணிகளை முன்னின்று நடத்துகிறது.
தேசத்தைக் காக்க ஒவ்வொரு நொடியும் பணியாற்றி வருவதையும், எத்தகையை தாக்குதலையும் எதிர்கொள்ளும திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளது என்பதையும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.