பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் எந்தெந்த பகுதிகள் தகர்க்கப்பட்டன, எந்தெந்த விமானங்கள் வீழ்த்தப்பட்டன, எத்தனை முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் இந்திய ராணுவம் வெளியிட்டது.
இத்தனை பெரிய தோல்வியை அடைந்திருந்தாலும், எதுவும் நடக்காதது போல் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பேசி வருகிறது. நேரடி போரில் பலத்த அடி வாங்கியபோதும், பாகிஸ்தான் வார்த்தை போரை இதுவரை நிறுத்தவில்லை. குறிப்பாக, அதன் ராணுவ தளபதி அசீம் முனீர் தொடர்ச்சியாக இந்தியாவை சீண்டியபடியே உள்ளார்.
கடந்த 2 மாதத்தில் 2வது முறையாக அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், தொடர்பே இல்லாமல் இந்தியா குறித்து பேசத் தொடங்கினார். சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டுவதற்காகத் தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாகவும், அவ்வாறு அணை கட்டினால் அதனைத் தகர்த்தெறிவோம் எனவும் கூறினார்.
சிந்து நதி இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல எனப் பேசிய அசீம் முனீர், 10 ஏவுகணை செலுத்தி அணையைத் தரைமட்டமாக்குவோம் என தெரிவித்தார். மேலும், இந்தியாவிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், உலகின் பாதியை அழித்துவிடுவோம் எனவும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நூற்றுக்கணக்கான ட்ரோன்களை, ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் செலுத்தியது. அதில் ஒன்று கூட இலக்கை அடையவில்லை. அதற்கு முன்பாகவே அவை அனைத்தையும் இந்திய ராணுவம் வானிலேயே சுட்டுவீழ்த்தியது. நிலைமை இவ்வாறு இருக்க, உலகத்தின் பாதியை அழிப்போம், அணையை உடைப்போம் எனப் பாகிஸ்தான் பேசி வருவது நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.
இதனிடையே, அசீம் முனீரின் பேச்சுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அணு ஆயுத மிரட்டல்களை விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான் எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் இது போன்ற பொறுப்பற்ற கருத்து குறித்து சர்வதேச சமூகமே ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், பயங்கரவாதிகளுடன் கரம்கோா்த்துக்கொண்டு செயல்படும் ஒரு நாட்டின் அணுஆயுத செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுவதாக, வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணியமாட்டோம் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதறகான அனைத்து நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.