வெற்று விளம்பரங்களுக்கு கோடி கோடியாக இரைத்துவிட்டு, வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகித்து வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்திவைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் அவதியுற்று வரும் வேளையில், அவர்களின் மீது மேலும் நிதிச்சுமையை ஏற்றுவது நியாயமா? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அயல் மாநிலங்களில் தமிழ் படிக்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்கள் தான் என்பது தெரியாதா? இதுதான் தமிழ் வளர்ச்சியில் திராவிட மாடல் கொண்டுள்ள அக்கறையா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோபாலபுரம் தலைமுறையினரின் பகட்டு செலவுகளான பேனா சிலை, கார் ரேஸ், பிரச்சார நடனம், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு நிதியை அள்ளித் தெளிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ் தலைமுறையினரின் வறுமையும், தமிழ் வளர்ச்சியும் புலப்படாதது ஏனோ? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அன்னைத் தமிழின் வளர்ச்சியில் அரசியலைத் தாண்டி உண்மையாகவே திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக இம்முடிவைக் கைவிட்டு வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு பாடநூல்களை வழக்கம் போல இலவசமாக வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.