தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி வழக்கறிஞர் வினோத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தார்.
அப்போது, அவசர முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் வினோத், மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக முறையீடு செய்தார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு, தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது என்றும், தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி தோற்றம் கட்டமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், நாள்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.