புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த வருமான வரிச்சட்டம், 1961-ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் மக்களவையில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது தொடர்பாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா, 2025-ஐ திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது.
அதன்படி நடைமுறையிலுள்ள வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துதல், வரி விகிதங்கள் மற்றும் வரி தவிர்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதா இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.