மதுரையில் தவெக மாநாட்டிற்குப் பல நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மாநாடு 3 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அந்த நேரத்திற்குள் மாநாட்டு பந்தலுக்கு தொண்டர்கள் வர வேண்டும் எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து யார் தலைமையில் எந்தெந்த ஊர்களில் இருந்து எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் சாலையைச் சரி செய்ய வேண்டும் எனவும் பார்க்கிங் மற்றும் மேடைக்கு இடையிலும், விஜய் வந்து செல்லக் கூடிய வழியில் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணிகள், முதியோர்களுக்குத் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள காவல்துறை மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களில் யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது? என்ற விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்தளவு அதனைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.