ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம் வெளிவந்துள்ளது. போர் விமானங்களுக்கு வெளியேற்ற இருக்கைகளைத் தயாரிக்கும் பிரபல பிரிட்டிஷ் நிறுவனமான மார்ட்டின்-பேக்கர் பட்டியலில் இந்த இரகசியம் தெரிய வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. சுமார் 88 மணி நேர தொடர் தாக்குதலில், இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானத் தளபதி A.P. சிங் தெரிவித்திருந்தார். அதற்காகச் சான்றாக, மார்ட்டின்-பேக்கர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல் அமைந்துள்ளது.
மார்ட்டின்-பேக்கர் என்பது இராணுவ விமானங்களுக்கான வெளியேற்ற இருக்கைகளை வடிவமைத்துத் தயாரிப்பதில் சர்வதேச அளவில் பெயர் பெற்ற ஒரு பிரிட்டிஷ் விண்வெளி நிறுவனமாகும்.
1934ம் ஆண்டு சர் ஜேம்ஸ் மார்ட்டின் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் முதலில் விமான வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஒரு துயர விமான விபத்துக்குப்பின், மார்ட்டினும் அவரது குழுவினரும் விமானி பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் EXIT எனப்படும் வெளியேற்ற இருக்கைகளை வடிவமைத்தனர்.
வெளியேற்ற இருக்கைகள், விபத்துக்குள்ளாகும் விமானத்திலிருந்து ஒரு விமானி விரைவாகத் தப்பிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மார்ட்டின்-பேக்கரின் வெளியேற்ற இருக்கைகள் உலகெங்கிலும் உள்ள பல ராணுவ விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
F-35 போன்ற மிகவும் மேம்பட்ட போர் விமானங்கள், JAS-39 Gripen மற்றும் Eurofighter Typhoon போன்ற ஐரோப்பிய போர் விமானங்கள் மற்றும் L-39NG, இத்தாலிய M-346 போன்ற பயிற்சி விமானங்கள் அனைத்தும் மார்ட்டின் பேக்கரின் இருக்கையுடன் பொருத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் JF-17 மற்றும் F-16 போர் விமானங்கள் மார்ட்டின்-பேக்கர் இருக்கைகளைக் கொண்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய தேஜஸ் போர் விமானங்களும் மார்ட்டின்-பேக்கர் வெளியேற்ற இருக்கைகளைப் பயன்படுத்துகின்றன.
இது வரை, உலகளவில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களுக்கு சுமார் 92,000 க்கும் மேற்பட்ட வெளியேற்ற இருக்கைகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. ஒரு விமானி தனது இருக்கைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக வெளியேற்றும் போதெல்லாம் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைத் தனது எக்ஸ் தளத்தில் விரிவாகப் பதிவு செய்து வருகிறது மார்ட்டின்-பேக்கர் நிறுவனம்.
ரகசிய ஒப்பந்தம் காரணமாகப் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விவரங்களை வழங்குவதில்லை என்றாலும், காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைப் புதுப்பித்துப் பதிவிடுகிறார்கள். வெளியேற்ற இருக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 7,900க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகப் பதிவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப்படை மிராஜ் V ரோஸ் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் PRM4 இருக்கையைப் பயன்படுத்தி இரண்டு விமானிகளும் வெற்றிகரமாக உயிர் தப்பியதாகவும் மார்ட்டின்-பேக்கர் பதிவிட்டுள்ளது. அதுவரை 7,784 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
கடந்த மே 7 ஆம் தேதி, VFA-11 இலிருந்து ஒரு USN F/A-18F சூப்பர் ஹார்னெட் செங்கடலில் மோதிய விபத்தில், அதில் இருந்த இரு விமானக் குழுவினரும் வெற்றிகரமாக உயிர் தப்பினார்கள் என்று பதிவிட்டுள்ள மார்ட்டின்-பேக்கர் நிறுவனம், காப்பாற்றப்பட்ட விமானிகளின் மொத்த எண்ணிக்கையை 7,788 எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
அதேநாளில், ஒரு விமான கண்காட்சிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்த பின்லாந்து பாதுகாப்புப் படை விமானம் விபத்துக்குள்ளானது. அதிலும் விமானி வெற்றிகரமாக உயிர் தப்பியதாக பதிவிட்ட மார்ட்டின்-பேக்கர் நிறுவனம், மொத்த எண்ணிக்கையை 7,789 ஆக குறிப்பிட்டிருந்தது.
இந்த பதிவுகளில் எண்ணிக்கை 7,785 மற்றும் 7,786 ஆகியவை கணக்கிடப்படவில்லை எனத் தெரிய வருகிறது. மேலும், கடந்த ஜூலை 31 ஆம் தேதி, அப்பட்டியலில் விமான விபத்தில் உயிர் தப்பியவர்களின் எண்ணிக்கை 7,793 என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மே 7ஆம் தேதிக்குப் பிறகு, விமானப் பயிற்சியின் போது, துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். மார்ட்டின் பேக்கர் பட்டியலில் 7,790, 7791,மற்றும் 7792 ஆகிய எண்ணிக்கை காணவில்லை. பாகிஸ்தானின் 5 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் கூறியதற்கான சான்றாக மார்ட்டின் பேக்கர் பட்டியல் உள்ளது.
குறைந்தபட்சம் மூன்று பாகிஸ்தான் விமானிகள் மார்ட்டின்-பேக்கர் கைப்பிடியை இழுத்து இந்தியாவின் தாக்குதல் பற்றி எடுத்துச் சொல்ல உயிர் பிழைத்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? என்று பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.