ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி விதித்தது தவறு என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா நம்பகமான நட்பு நாடு என்றும், பிரதமர் மோடியின் தலைமை அமெரிக்காவுக்கு நல்லது என்றும் 60 சதவீத அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்து உத்தரவிட்டார். பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், 25 சதவீத கூடுதல் வரி என்று, மொத்தம் 50 வரி சதவீத வரி அறிவித்தார்.
வரிவிதிப்புக்குப் பின், இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையையும் ட்ரம்ப் நிராகரித்தார். வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ட்ரம்பின் இந்த புதிய வரி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் ட்ரம்பால் குறி வைக்கப்படவில்லை. ரஷ்ய எண்ணெய் டேங்கர்களுக்கு எதிராக அமெரிக்கா எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்துக்கு உதவும் வங்கிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் அமெரிக்கா எந்த ஒரு தனித் தடைகளையும் விதிக்கவில்லை.
ஆசிய நாடுகளிலேயே அதிகபட்ச வரியை இந்தியாவுக்கு விதித்துள்ள ட்ரம்ப்பின் நடவடிக்கை, நியாயமற்றது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வரி விதிப்பு, அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழு, கடந்த வாரம் அமெரிக்க வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில், பங்கேற்றவர்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியா மீது அதிக வரி விதித்தது தவறு என்று கூறியுள்ளனர்.
அதேநேரம், ட்ரம்பின் புதிய வரிவிதிப்புக் கொள்கை, அமெரிக்காவுக்கு நல்லது என்று 44 சதவீத அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளை அமெரிக்கர்கள் உறுதியாக ஆதரிக்கின்றனர் என்றாலும், புவிசார் அரசியலில் தனது சுய லாபத்துக்காக,அமெரிக்காவின் நட்பு நாடுகளின் மீது அதிக வரி விதிப்பதை அமெரிக்கர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை என்று கருத்துக் கணிப்புக் குழுவின் தலைவர் பாஷாம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஒரு “இறந்த பொருளாதாரம்” என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், 64 சதவீத அமெரிக்கர்கள், உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கு நல்ல அறிகுறி என்று வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி ஒரு வெற்றிகரமான அரசை வழிநடத்துவதாகவும், நம்பகமான நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும் கூறியுள்ள பெரும்பான்மையான அமெரிக்கர்கள்,இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையே அமெரிக்காவுக்கு நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை, H-1B விசா குறித்த கேள்விக்கு மட்டுமே எதிர்மறையான பதில் வந்துள்ளது. H-1B தொழில்முறை விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ட்ரம்பின் முடிவை 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆதரிக்கின்றனர்.
H1-B விசாக்களில் வரும் இந்தியர்கள், அமெரிக்கர்களிடமிருந்து வேலைகளைப் பறிக்கின்றனர் என்று அமெரிக்கர்கள் நம்புகின்றனர் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, நட்பு நாடான இந்தியா மீதான ட்ரம்பின் அணுகுமுறை ஏன் தலைகீழாக மாறியது என்று அமெரிக்க ஊடகங்களிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன.
டிரம்பின் இந்த முடிவால் இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் குறித்த டிரம்பின் கருத்துக்களை அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்கின்றன. மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா என்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.