அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் சம்பவங்களைக் குறைக்கச் சாட்டையைச் சுழற்றவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கான திட்டங்களையும் டிரம்ப் கையில் எடுத்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்குப் பெருமைக்கும், தேசபக்திக்கும் அடையாளமாகத் திகழும் வாஷிங்டன் டி.சி., சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பு வாசிகள், அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதி என்று கருதப்பட்டது. ஆனால் தற்போதோ நிலைமையே வேறு.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழுள்ள கியூபா தலைநகர் ஹவானாவை விட 18 மடங்கு அதிகமான கொலைகள் வாஷிங்டனில் நடைபெறுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே புலம்பும் அளவுக்கு குற்றச் சம்பங்கள் அதிகரித்துள்ளன…
வாஷிங்டனில் கடந்த 2012ம் ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு 13.9 சதவிகிதமாக இருந்த கொலை விகிதம், 2024ம் ஆண்டு 23.3 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நியூயார்க் நகரை விட ஆறு மடங்கு அதிகம் என்றும், அட்லாண்டா, சிகாகோ மற்றும காம்ப்டன் பகுதிகளை விட அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கொலை மட்டுமல்ல, வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் கார் திருட்டு சம்பவங்களும் அதிகரித்திருப்பது வாஷிங்டனை உலகின் மோசமான நகரப் பட்டியலுக்குள் தள்ளியுள்ளது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் வாஷிங்டன் பாதுகாப்பான பகுதி அல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தலைநகருக்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வாஷிங்டன் காவல்துறையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் டிரம்ப்… வாஷிங்டனில் அவசர நிலை நிலவும்போது, அமெரிக்க அதிபர் நகரத்தின் காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் எடுக்க அதிகாரம் அளிக்கும் “District of Columbia Home Rule Act” சட்டப் பிரிவு 740-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
நகரக் காவல் துறையை 30 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு செனட் உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த புதிய நடவடிக்கை, உள்ளூர் நிர்வாகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கியுள்ளது.
வாஷிங்டனில் இருந்து வீடில்லா மக்களை நகர மையத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
இந்த நடவடிக்கைக்குச் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், இது நகரத்தின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில், காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள டிரம்ப், வாஷிங்டனை குற்றமற்ற நகரமாக மாற்றுவாரா, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.