அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடைபெற உள்ளது. இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது… 2022-ல் கிரீமியா பகுதிக்காக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளிலும் வெடித்த மோதல் இன்னும் முடிந்த பாடில்லை.
அதிபராக பதவியேற்றப் பின் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று கூறிய டிரம்ப், அதனை நிஜமாக்க முனைப்புக் காட்டி வருகிறார். அவர் ஏற்கனவே கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி அலாஸ்காவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார்.
முன்னதாக, இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார். உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் சிலவற்றை மீண்டும் உக்ரைனுக்கு வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தைக்குப் பின், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
விளாடிமிர் புதின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா செல்லும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ரஷ்யா தரப்பில், போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை புதின் முன்வைப்பார் என்றும், அதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடம் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை குறித்தும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையை ரஷ்ய அதிபர் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைப் பலவீனப்படுத்தி, போரை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திவிடுவார் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனை தவிர்த்துவிட்டு ரஷ்யா உடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் புதினுக்கு இந்தப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், டிரம்புடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காகவே செல்கிறார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. எதுவாயினும், இருதரப்பு தலைவர்கள் சந்தித்த மூன்று நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.