திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மக்களவையில் உரையாற்றிய அவர், 60 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்து வரும் வருமான வரிச் சட்டம் 1961, மிகவும் சிக்கலான கட்டமைப்பை கொண்டிருப்பதால் அதனை புரிந்துகொள்ள கடினமாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், வருமான வரிச் சட்டம் 1961-ன் தெளிவற்ற மொழியே பல பிரச்னைகளுக்கு காரணமாக இருந்ததாக கூறிய நிர்மலா சீதாராமன், அதிலுள்ள விதிகளை பலரும் பல வகையில் புரிந்துகொள்ளும் சூழல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமலில் உள்ள வருமான வரி சட்டத்தில் இருந்த அத்தியாயங்கள், வார்த்தைகள் புதிய மசோதாவில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், குறிப்பாக வருமான வரிச் சட்டம் 1961-ல் இருந்த 47 அத்தியாயங்களும், 5.12 லட்சம் வார்த்தைகளும், புதிய மசோதாவில் 23 அத்தியாயங்கள் மற்றும் 2.59 லட்சம் வார்த்தைகளாக குறைக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
அத்துடன், காப்பீடு, ஓய்வூதிய நிதி உள்ளிட்ட சில திட்டங்களில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகைக்கு, முழு விலக்கு வழங்கப்படும் என புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.