கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடையில், சலுகை விலை பிரியாணி அறிவித்தபடி கிடைக்காததால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடையின் நிறுவன தினத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சலுகை விலையில் பிரியாணி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி கடையின் முன் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் நண்பகல் 12 மணி முதல் சலுகை விலையில் பிரியாணி இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாமல் சலுகை அறிவித்ததால், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஊழியர்களை கடிந்து கொண்டதோடு, கடையை மூடவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கடை மேலாளரை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.