கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்…
சர்வதேச அளவில் பேரழிவைக் கொடுத்த போர்கள்தான், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் உந்துதலாக அமைந்திருக்கிறது… நவீன தொழில்நுட்பங்கள் வளர வளர, ஆயுதங்களும் நவீனத்துவம் பெற்று, உருமாறி வருகின்றன. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றவையாகப் பார்க்கப்படுகிறது. உலகத்தில் எந்த மூலையில் இருந்து கொண்டும் மற்றொரு மூலையைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் குறிப்பிடத்தக்க நாடுகளில் குவிந்து கிடக்கின்றன.
இது போன்ற ஏவுகணைகள் இந்தியாவிடம் இல்லை என்றாலும். பிராந்திய பாதுகாப்பு வரம்புக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் கூடிய ஏவுகணைகளுக்கு இந்தியாவிடம் பஞ்சமில்லை என்றே கூறலாம்.
சர்வதேச அளவில் ராணுவ தளவாடங்களில் நவீனத்துவத்தைப் புகுத்துவதிலும், ஆயுதங்களைக் குவிப்பதிலும் குறிப்பிட்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் திறனை வெளிப்படுத்துவதிலும், மூலோபாய நலன்களை பாதுகாப்பதிலும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன. இதில் குறிப்பிட்ட 5 நாடுகள் மட்டுமே பல்லாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணை தன்னகத்தே கொண்டுள்ளன.
உலகளவில் வலுவான உயர் தொழில்நுட்பங்களுடன் இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது ரஷ்யாதான்… (RS-28 Sarmat) RS-28 சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
அதுமட்டுமின்றி, வரம்பற்ற எல்லைகளைக் கொண்டுள்ள அணுசக்தியால் இயங்கும் ரஷ்யாவின் (Burevestnik cruise missile) பியூரெவெஸ்ட்னிக் குரூஸ் ஏவுகணை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் (Minuteman III missile) மினிட்மேன்-3 ஏவுகணை 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவையாக அறியப்படுகிறது. இந்த ஏவுகணைகள் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவப்படும் என்பதால், கடலிலிருந்தபடி 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதில் சீனாவும் சளைத்ததில்லை. அதன்படி 12 ஆயிரம் கிலோ மீட்டர் மற்றும் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் DF-41 ஏவுகணைகள் சீனா வசம் உள்ளன. பிரிட்டனிடம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய Trident II ஏவுகணைகள் உள்ளன. இதேபோன்று பிரான்சிடம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இலக்கை தாக்கக்கூடிய M51 ஏவுகணைகள் உள்ளன.
இந்த வரிசையில் இல்லாவிட்டாலும், வடகொரியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. மேலும் அதனை மெருகேற்றும் நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள இந்தியா, பிராந்திய பாதுகாப்புக்கு மட்டுமான ஏவுகணைகளை வைத்துள்ளது.
குறிப்பாக 5000 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ரக ஏவுகணை ஆசியா முழுவதையும் மையப்படுத்தி, குறிப்பாகச் சீனாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தெற்காசியாவில் ஒரு குறிப்பிடத்தக்கச் சக்தியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.