பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் போது விடுதலைக்குப் போராடிய தலைவர்களில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்மையானவர். அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அக்டோபர் 30 ஆம் தேதி, தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் , பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர், தேசியம் எனது உடல்- தெய்வீகம் எனது உயிர் என முழங்கி தனது கடைசிக் காலம் வரை தேசத்துக்காகவும் தெய்வீகத்துக்காகவும் பாடுபட்டார்.
தமிழகத்தில் குற்றப்பழங்குடியினர் சட்டத்தின் கீழ் சுமார் 68 சமூகத்தினர் மீது வழக்குப் போடப்பட்டது. பல ஆண்டுகளாகத் தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர், இச்சட்டத்தினால் கொடுமைப்படுத்தப்பட்டனர். 5000க்கும் மேற்பட்டோர் இந்தச் சட்டத்தினால் கொல்லப் பட்டனர்.
பசும்பொன் தேவர் தலைமையில் இக் கொடிய சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பல கிராமங்களிலும் கை ரேகை வைக்க மறுத்து கட்டை விரலை வெட்டி வீசினார்கள். போராட்டத்தைச் சமாளிக்க முடியாத பிரிட்டிஷ் அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து அனைவரையும் விடுவித்தனர்.
விடுதலைப் போரில் தீவிரமாக இருந்த பசும்பொன் தேவர், நேதாஜியின் மீது தீவிரப் பற்றுக் கொண்டு,அவரின் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார்.
இராணுவப் பாதையில் விடுதலை பெற விரும்பிய நேதாஜிக்குத் தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை நேதாஜியின் இந்தியத் தேசிய விடுதலை ராணுவத்துக்கு அனுப்பிய பெருமை பசும்பொன் தேவரையே சாரும்.
விடுதலைக்குப்பின் மூன்று முறை பார்வார்ட் ப்ளாக் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சமூக நலத்துக்காகவும்,தேச முன்னேற்றத்துக்காகவும் அயராது பாடுபட்ட பசும்பொன் தேவர்,1963 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளிலேயே காலமானார்.