டெல்லியில் தெரு நாய் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எம்.பி மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது மக்களிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..
தேசிய தலைநகரான டெல்லியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய் கடியால் பாதிக்கப்படுவது குறித்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நாய்களுக்கான காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக தெரு நாய் கடி பிரச்சனையை மிக மோசமான நிலை என விவரித்த நீதிபதிகள், இளம் குழந்தைகள் எந்த வகையிலும் தெரு நாய் கடிக்கு ஆளாகக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக விளக்கமளித்தனர்.
தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் விலங்கு நல ஆர்வலர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விலங்கு நல ஆர்வலர்கள் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதற்கிடையே டெல்லி ஹனுமான் மந்திர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற, எம்.பி மேனகா காந்தியின் சகோதரியும், விலங்கு நல ஆர்வலருமான அம்பிகா சுக்லா, ரேபிஸை ‘ஆபத்தற்ற மென்மையான வைரஸ்’ எனக் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி யூ-டியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், ரேபிஸ் வைரஸை வெறும் சோப்பால் கழுவியே அகற்றிவிட முடியும் எனவும், நாய்கள் மட்டுமல்ல சூடான ரத்தம் கொண்ட அனைத்து பாலூட்டிகளின் கடியில் இருந்தும் ரேபிஸ் வைரஸ் பரவக்கூடும் என்றும் கூறியிருந்தார்.
மூளையைத் தாக்கி படிப்படியாக மரணத்தை விளைவிக்கும் ரேபிஸ் வைரஸ் மிகவும் ஆபத்தானது எனப் பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், அம்பிகா சுக்லாவின் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
குறிப்பாக ரேபிஸ் வைரஸ் குறித்து அம்பிகா சுக்லா தவறான தகவல்களை பரப்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஒருமித்த மருத்துவ கருத்துக்களைப் புறந்தள்ளும் அம்பிகா சுக்லா, முட்டாள்தனமான கூற்றுக்களை மிகவும் உறுதியுடன் கூறுவதாகவும் பலர் விமர்சித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்னதான் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களுடன் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், உலகில் மனித பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதே அனைத்திலும் பிரதான செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.