இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரழிவை ஏற்படுத்தியுள்ள பெருவெள்ளத்தின் பாதிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி மாபெரும் இயற்கை சீற்றமாக மாறியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயற்கை பேரழிவின் விளைவாகச் சிம்லா மற்றும் லாஹவுல் ஸ்பிட்டி பகுதியில் உள்ள இரு சிறிய பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகளை மூடும் நிலை உருவாகியுள்ளது.
சிம்லா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம், பல குடியிருப்பு கட்டடங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கவி பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு காவல் நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு பேருந்து நிலையமும் அதனை ஒட்டிய பகுதியிலிருந்த கடைகளும் இந்த இயற்கை பேரழிவுக்கு இரையாகின.
எதிர்பாராத இந்த இயற்கை சீற்றத்தால் கவி, கியாவோ மற்றும் கூட் ஆகிய மூன்று கிராமங்கள் வெளியுலகத்தில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி உயரமான பகுதிகளில் தங்க வைத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலு மற்றும் கின்னௌர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கின்னௌர் மாவட்டத்தில் நிலையற்ற நிலப்பரப்பு மற்றும் வலுவான நீரோட்டங்களுக்கு மத்தியில், ஆற்றின் மறுகரையில் சிறு காயங்களுடன் சிக்கியிருந்த 4 பேரை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள நிலச்சரிவு சம்பவங்கள் மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 20-ம் தேதி முதல் மழை தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிக்கி 240-க்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்த உச்சநீதிமன்றம், இந்த நிலை மேம்படவில்லை என்றால் மொத்த மாநிலமும் காற்றில் மறைந்துபோகக் கூடும் என எச்சரித்திருந்தது.
அத்துடன் சுற்றுலாத் தலங்களில் சுற்றுச்சூழல் அமைப்பைப் பலியாக்கி வருவாய் ஈட்ட முடியாது என எடுத்துரைத்திருந்த நீதிமன்றம், வருவாய் ஈட்டுவது மட்டுமே முக்கியமல்ல என்பதை எடுத்துரைக்க விரும்புவதாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.