இஸ்ரேல் நாட்டின் அயன் டோமைப் போல் இந்தியாவின் வான் பரப்பைப் பாதுகாக்கச் சுதர்சன சக்ரா திட்டம் தயாராகி வருவதாகக் குடியரசு தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பகவான் கிருஷ்ணரின் ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் தயாராகி வரும் இந்த திட்டம் எப்படிச் செயல்படும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கிருஷ்ணரின் சக்திவாய்ந்த ஆயுதமான சுதர்சன சக்ராவின் பெயரில் புதிய வான் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2035-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டம், வான் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்பட்டு துல்லியமாக எதிர் தாக்குதல் நடத்தும் திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்து புராணங்களின் அடிப்படையில் சுதர்சன சக்ரா என்பது பகவான் விஷ்ணுவின் ஆயுதங்களுள் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை நோக்கி ஏவப்படும் அந்த ஆயுதமானது, அதீத வேகத்தில் இலக்குகளைத் தாக்கி அழித்து, பின் ஏவப்பட்டவரிடமே வந்து சேரும் திறன் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, சக்திவாய்ந்த ஆயுத அமைப்பைக் கொண்டிருக்கும் சுதர்சன சக்ரா திட்டம், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பதோடு மட்டுமின்றி, அவர்கள் மீதும் துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு கவசம் விரிவடைந்துகொண்டே இருக்கும் எனவும், இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக உணர முடியும் என்றும் பிரதமர் மோடி தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே நடைமேடைகள், மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்கள், வரும் 2035-ம் ஆண்டிற்குள் தேசியப் பாதுகாப்பு கேடயத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, இது வழக்கமான ராணுவ மண்டலங்களுக்கு அப்பால் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான அரசின் உந்து சக்தியை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் அயன் டோமைப் போல் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்தும் சுதர்சன சக்ரா நம்மைப் பாதுகாத்து நாட்டின் மீது ஒரு பாதுகாப்பு கேடயமாகச் செயல்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சுதர்சன சக்ரா திட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் அளவுக்குச் செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். இந்தியாவின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் ஒருங்கிணைப்பதே சுதர்சன சக்ரா திட்டத்தின் மையமாகும்.
அதன்படி, IACCS என்னும் ஒருங்கிணைக்கப்பட்ட AIR COMMAND மற்றும் CONTROL SYSTEM வலையமைப்பை, ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்துப் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலவை அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதன் மீது துல்லிய தாக்குதலை நடத்தும் ஒரு தடையற்ற வலையமைப்பை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகச் செயல்படவுள்ள சுதர்சன சக்ரா திட்டம், பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
ஃபைபர் ஆப்டிக் அடிப்படையிலான தொலைத்தொடர்பு கட்டமைப்பு கொண்டு வடிவமைக்கப்படவுள்ள IACCS அமைப்பு, சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக்-8, MR-SAM மற்றும் S-400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பால் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பது சாத்தியமே என துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளுக்கு இணையாக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பு, நாட்டின் வான் பாதுகாப்பு நவீனமயமாக்கலின் உச்சபட்சம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.