நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் என மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. தேசத்தின் நலனிற்காக தனது சொந்த வாழ்வை சமுதாயத்திற்கு அர்ப்பணித்தவர், தான் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதன் மூலம், இந்தியர்கள் ஒருபோதும் உலக நாடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். அய்யா அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தில், இந்தியச் சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளை பெருமையுடன் நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நினைவு கூர்கிறோம். அவரது தொலைநோக்குப் பார்வை, இரக்கம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவை நவீன இந்தியாவின் பயணத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.
உள்கட்டமைப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்பு இந்தியாவை உலக வரைபடத்தில் ஒரு வலுவான நாடாக நிலைநிறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்,
நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவுதினம் இன்று. இந்தியா, கல்வி, பொருளாதாரம், அறிவியல், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்ற கனவை இந்தியர்களின் மத்தியில் முதலில் விதைத்தவர்.
வல்லாதிக்க நாடுகளிடம் மட்டுமே இருந்த அணு ஆயுதத்தை “எங்களாலும் தயாரிக்க முடியும்” என இந்த உலகுக்கு பறைசாற்றிய தலைவர்.
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இன்று நம் பாரத தேசம் காஷ்மீர் முதல் குமரி வரையிலும், மும்பை முதல் கொல்கத்தா வரையிலும் பிரம்மாண்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதற்கு, இவர் கண்ட கனவே காரணம்! இந்திய சரித்திரத்தின் மாபெரும் தலைவர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.