ஆர்.எஸ்.எஸ் பற்றிக் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையை விமர்சித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு நூற்றாண்டாகப் பாரத தேசத்தின் பாதுகாப்பிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பணி மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்த சேவை பிரமிக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், அத்தகைய சுயநலமற்ற இயக்கமான ஆர்.எஸ்.எஸ் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டதைக் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களில் சிலர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனப் போரின்போது தங்கள் சுய ஆதாயத்திற்காக, சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து தேசத்திற்குத் துரோகம் செய்தவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்புகளில் இணைந்து தேச சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.