லாஸ் வேகாஸில் அதிபர் டிரம்பின் புறக்கணிப்பு நடவடிக்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, வீட்டு உரிமையாளர்களை கடும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
அமெரிக்காவின் சுற்றுலா நகரமான லாஸ் வேகாசில் உள்ள கிளார்க் கவுண்டியில், கடந்த ஜூன் மாதம் மட்டும் தவணைகளை செலுத்தாதன் காரணமாக 200 பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக நெவாடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிக்கை கண்டறிந்துள்ளது.
வீடு உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட சொத்தை கடன் பெற்று வாங்கிய உரிமையாளர், அதற்குரிய தவணைத் தொகையைச் செலுத்த தவறும் பட்சத்தில், அந்த சொத்தை ஜப்தி செய்யும் வகையில் தவணை தவறுதல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. தெற்கு நெவாடாவில் சுற்றுலா பயணிகள் வருகை சரிந்தது, அதிக வட்டி விகிதம், கட்டணங்கள் மீதான உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை உள்ளிட்டவை இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆயிரத்து 290 கடன் தவணை தவறுதல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவை சொந்த வீடு வாங்கியவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட சரிவால் லாஸ் வேகாசில் வேலைவாய்ப்பின்மை விகிதம் தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் உள்ளூர் பொருளாதார நிலை பெரும் சவாலை சந்திக்கும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், லாஸ் வேகாஸ் மக்களின் இந்த நிலைமைக்கு, அதிபர் டிரம்பின் தவறான கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே லாஸ் வேகாஸ் மாநாடு மற்றும் பார்வையாளர்கள் ஆணையம் (LVCVA) சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சரிவு, அதனால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில் நடந்த லாஸ் வேகாஸ் மாநாடு மற்றும் பார்வையாளர்கள் ஆணைய இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், சர்வதேச உறவுகள் குறித்து நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட சில முடிவுகள், சுற்றுலாத் துறையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ஆணையத் தலைவர் ஸ்டீவ் ஹில் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடா நாட்டிற்கு எதிரான அதிபர் டிரம்பின் விரோதப் போக்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதிபராகப் பொறுப்பேற்றது முதல் கனடாவைத் தனது கட்டண கொள்கைகளுக்கு கீழ்படியுமாறு டிரம்ப் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது லாஸ் வேகாஸுக்கு அதிகளவில் வந்துகொண்டிருந்த கனடா நாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள சின் சிட்டி பிரதான விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாகக் குறைந்து கொண்டே இருக்கும் என லாஸ் வேகாஸ் மாநாடு மற்றும் பார்வையாளர்கள் ஆணையத்தின் ஆய்வறிக்கை விவரிக்கிறது.
குறிப்பாக நடப்பாண்டு பிப்ரவரியில் 3.68 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 3.39 மில்லியனாகவும், ஏப்ரல் மாதத்தில் 3.3 மில்லியனாகவும் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நகரத்திற்கு வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 85.3 சதவீதம் நிரம்பியிருந்த ஹோட்டல்கள் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 82.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இயல்பைவிட 2.5 சதவீதம் குறைவு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளதால், சுற்றுலாத் துறையை நம்பியுள்ள பல தொழிலாளர்கள் பெறும் டிப்ஸ் மட்டும் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் தங்களுக்கான ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டதாக பல்வேறு சேவைகளை வழங்கும் ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலர் அதிபர் டிரம்பின் நிர்வாகத் திறனற்ற செயல்களே இந்த நிலைக்குக் காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் மக்கள் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளக்கூடத் திண்டாடும் நிலை உருவாகும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.