அலாஸ்காவில் ட்ரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு உக்ரைன் போர் நிறுத்த குறித்த எந்த அறிவிப்பும், அமைதி ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்திருக்கிறது. உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் இந்தியா மீது மேலும் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில், இனி என்ன நடக்கும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்க முன்வந்தது. இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
அதுவரை ரஷ்யாவில் இருந்து வெறும் 2 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்து வந்த இந்தியா,படிப்படியாக 40 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்யத் தொடங்கியது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் காரணம் காட்டி, கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்தார்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தக் கூடுதல் வரி வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வர்த்தகம் செய்யும் போது இந்தியா மீது மட்டும் வரி விதிப்பது நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்த இந்தியா, தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த இந்தியாவால் மேற்கொள்ளப்படும் ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக ஊக்குவித்தது என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் நடக்கும் ட்ரம்ப்- புதின் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், இந்தியா மீதான 25 சதவீத இரண்டாம் நிலை வரி மேலும் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்திருந்தார்.
மேலும், இந்தியா மீதான இரண்டாம் நிலை வரியை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ரஷ்யாவும் இந்தியாவும் இறந்த பொருளாதாரங்கள் என்றும், ரஷ்யாவுடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். இவையெல்லாம், உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை நிர்ப்பந்திக்க ட்ரம்ப் பயன்படுத்திய உத்திகள் ஆகும்.
இந்தியாவைத் தாக்கினால் ரஷ்யாவுக்கு வலிக்கும் என்பதை அறிந்த ட்ரம்ப், ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்துவிட்டார். அதே நேரத்தில் அலாஸ்கா சந்திப்பின் மூலம்,சர்வதேச அளவில் இழந்த அங்கீகாரத்தை புதின் மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். எந்த ஒப்பந்தமும் இல்லை- போர் நிறுத்த அறிவிப்பும் இல்லை. மேலும் எந்த உத்தரவாதத்தையும் புதினிடம் பெறாமல் வெறும் கையுடன் ட்ரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பியிருக்கிறார்.
ஒரே கல்லில், உக்ரைனையும், ஐரோப்பிய நாடுகளையும் ஓரம்கட்டிவிட்டு, அமெரிக்காவுடன் ரஷ்யாவின் நெருக்கத்தை உலகத்துக்குக் காட்டியுள்ளார் புதின். அலாஸ்கா பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்குமா ? என்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றன.
உண்மையில், ரஷ்யாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் சீனா மீது அதிக வரிவிதிக்காமல் இந்தியாவை ட்ரம்ப் குறிவைத்ததற்குக் காரணமே வேறு. என்னதான் இருந்தாலும், சீனாவை விட இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவே ஆழமானது. சீனாவுக்கு வரிவிதிப்பாதல் ரஷ்யாவைப் பணிய வைக்க முடியாது என்பது ட்ரம்ப்புக்குத் தெரியும். ஆகவே தான் இந்தியாவை வைத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்தார் ட்ரம்ப்.
ரஷ்ய அதிபர் புதினும் தனக்கே உரித்தான கணக்கில் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ளார். புதினை பொறுத்தவரை, உக்ரைன் தனி சுதந்திர நாடாகவும், நேட்டோ உறுப்பு நாடாகவும் இருக்கக் கூடாது. நேட்டோ அமைப்பே பலவீனமாக வேண்டும் என்பது தான் நோக்கம்.
ட்ரம்பை பொறுத்தவரை, உக்ரைனின் கனிமவளங்களில் புதினுக்கு பாதி, தனக்குப் பாதி என்பதே கணக்காக உள்ளது. இதில், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ட்ரம்புடனான DEAL-யை புதின் வெற்றிகரமாக முடிப்பார் என்றே புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.