அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி கைபற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், 8 CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 11 மணி நேரமாக நடைபெற்றுவந்த சோதனை நிறைவடைந்த நிலையில், சிபியூ, பிரிண்டர் மற்றும் பல ஆவணங்கள் அடங்கிய பெட்டியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் பெரியசாமியின் வாகனத்தை சோதனையிட முற்பட்ட அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் சரவணன் தீக்குளிக்க முயன்றார். பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சரவணனை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் மற்றும் மகள் இந்திரா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்திரா வீட்டில் 17 மணி நேரமாக நடந்த சோதனையில் 2 பைகள் மற்றும் ஒரு சூட்கேஸில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்திரா வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவலறிந்து திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக, அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.