திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மலை அடிவாரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் வேத பல்கலைக்கழக வளாகங்களில் சுற்றத்திரிந்த சிறுத்தை ஒன்று அந்த வழியாகச் செல்லும் பயணிகள், பக்தர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைச் சிறுத்தை பாய்ந்து தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் 8 இடங்களில் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிடிப்பட்ட சிறுத்தை மாமண்டூர் வனப்பகுதியில் விடப்பட்டது.