நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் உணவு, இடப்பெயர்வில் பெரிய அளவிலான பாதிப்பை லாண்டனா எனப்படும் உண்ணிச் செடிகள் ஏற்படுத்தி வருகின்றன.
வனத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த களைச்செடிகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, யானைகளுக்கு எதிரான அந்த களை தாவரத்திலிருந்து, தத்ரூபமான யானை உருவங்களைக் கூடலூரைச் சேர்ந்த பழங்குடியின கைவினைஞர்கள் மூலமாக வடிவமைக்கபப்பட்டன. இவர்கள் தயாரித்த 100-க்கும் மேற்பட்ட யானை சிற்பங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் காட்டு யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி திறந்தவெளி வாகனங்களிலும், பொது இடங்களிலும் இந்த யானை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், நியூயார்க்கிலிருந்து பெவர்லி ஹில்ஸ் வரை சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பயணத்தை 13 மாதங்களில் நிறைவு செய்துள்ளதாகத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.