உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 15-ம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதின் தெரிவித்த விஷயங்கள் மற்றும் கோரிக்கைகளை ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய டிரம்ப், உக்ரைன் அதிபர் தங்களுடன் இருப்பது மரியாதை எனவும் நிறைய நல்ல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் கூறினார். உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரப் போவதாகவும் புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரால் முழு உலகமும் சோர்வடைந்து விட்டதாக கூறிய டிரம்ப், அதனை தாங்கள் முடித்து வைப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.