தமிழக டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தமிழக டிஜிபி பதவிக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், வரும் செப்டம்பர் மாதத்துடன் தான் ஓய்வு பெற இருப்பதால், தனது பெயர் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை என காரணமாக கூறப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்சம் 6 மாதம் பதவிக்காலம் இருந்தால் மட்டுமே காவல்துறை டிஜிபி பதவிக்கு ஒருவரின் பெயரை பரிந்துரைக்க முடியும் என்பது விதியாகும்.
ஆகையால், அந்த விதிமுறையில் தளர்வுகளை மேற்கொண்டு தனது பெயரையும் தமிழக டிஜிபி பதவிக்கு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரின் மனு மீது வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.