தர்மஸ்தலா கோயில் பகுதியில் சடலங்கள் புதைத்ததாகப் புகார் அளித்த நபர், தாம் கூறியது பொய் எனப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய நபர், கடந்த ஜூலை 3ஆம் தேதி சில வழக்கறிஞர்களுடன் சென்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
அதில், தர்மஸ்தலா கோயிலில் தாம் பணியாற்றிய காலகட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வேறு மாநிலத்திற்கு பணிக்குச் சென்றதால் மனசாட்சியின்படி தற்போது உண்மையைச் சொல்ல வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகார்தாரர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், சென்னையில் தம்மைச் சந்தித்த ஒரு கும்பல் தர்மஸ்தலா கோயிலில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்பட்டதாகப் பொய் கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சாட்சியாக விசாரிக்கப்பட்ட புகார்தாரரை இனி குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.