முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் மதுரையில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக மதுரை அவுட்டோர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடருவோம் எனத் தூய்மை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.