இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் – இருதரப்பு நம்பிக்கையை வளர்ப்பதும் மற்றும் எதிர்கால நல்லுறவுக்கான வரைபடத்தை அமைப்பது ஆகிய செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம்,அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் சீனாவுடன் 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. 1996 மற்றும் 2005-ம் ஆண்டுகளில், இருநாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
2017-ம் ஆண்டு, இந்திய-பூட்டான் எல்லையில் அத்துமீறி சாலை போட முயற்சி செய்த சீனாவின் நடவடிக்கையை ( Operation Juniper ) ஆப்ரேஷன் ஜூனிபர் மூலம் இந்திய ராணுவம் முறியடித்தது.
2020ம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒப்பந்தத்தை மீறி சீனா அத்துமீறி முகாம் அமைத்தது. மீண்டும் எல்லை பதற்றம் அதிகரித்தது. பலதரப்பட்ட நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெறத் தொடங்கின.
கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும் சந்தித்தனர். தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.
2005ம் ஆண்டில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் வழிகாட்டுதல்களின்படி, எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அடைவதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஏற்கெனவே உறுதிப் படுத்தி இருந்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி- யைச் சந்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பேணுவதற்கு, அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பின், அஜித் தோவலுடனும் ஆலோசனை செய்துள்ளார்.
சிறப்புப் பிரதிநிதி அளவிலான 24வது சுற்று விவாதங்களின் ஒரு பகுதியாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
எல்லையில் மேம்பட்டு வரும் சூழ்நிலையையும் எடுத்துரைத்த அஜித் தோவல், எல்லையில் அமைதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், புனித யாத்திரைகள் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் முதல் நதி தரவுகள் பகிர்வு, எல்லை வர்த்தகம் மற்றும் இணைப்பு வரையிலான பிரச்சினைகள் குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டுவதற்கான வழிவகை பற்றி விவாதித்ததாக வாங் யீ தெரிவித்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி, நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுக்காகப் பிரதமர் மோடி சீன வருகையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய வாங் யீ , அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் இந்திய-சீன உறவு உள்ளது என்பதை வரலாறும் யதார்த்தமும் நிரூபிக்கின்றன என்று கூறியுள்ளார்.
ஒருமித்த கருத்தை உருவாக்கவும், அடுத்த எல்லை ஆலோசனைகளுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடையாளம் காணவும், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கவும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வாங் யீ தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் பொதுவான நலன்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கடந்த கால பின்னடைவுகள் யாருடைய நலன்களுக்கும் பலனளிக்காது என்று உண்மையை உணர்ந்து கொண்டதாகக் கூறிய வாங் யீ, எல்லைகளில் இப்போது மீட்டெடுக்கப்பட்ட அமைதி இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வாங் யீ உறுதியளித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
அதன் அறிகுறியாக, உரங்கள்,அரிய வகை தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான இந்தியாவுக்கான இறக்குமதி தடையைச் சீனா நீக்கியுள்ளது.