அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால், இந்தியர் ஒருவர் கண்பார்வை மங்கி நாள்தோறும் அவதிப்படுகிறார். எதனால் இந்த பாதிப்பு…பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில் .
மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் விநோத சிகிச்சைகளை NEW ENGLAND பத்திரிகை செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்று தான் கண்ணில் புழு புகுந்ததால் இந்தியர் ஒருவரின் பார்வை மங்கிய சம்பவம்.
35 வயதுமிக்க இந்தியர் ஒருவர், கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவர்களை அணுகியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் அணிந்திருக்கும் லென்ஸ் காரணமாக இருக்கலாம் என யூகித்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சை மட்டும் அளித்து வந்துள்ளனர்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல பார்வை குறைந்த கொண்டே போனதால் குழப்பமடைந்த மருத்துவர்கள், உண்மையான காரணத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டினார்.
எல்லா வகையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய போதும் காரணம் புலப்படாததால், குழம்பிப்போன மருத்துவர்கள் நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.
இந்த முறை நுண்ணிய பாக்டீரியாக்களைப் பார்க்கக் கூடிய மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்திய மருத்துவர்கள், அதில் வந்த முடிவை பார்த்துத் திகைப்படைந்தனர். பாதிக்கப்பட்ட நபரின் இடது கண்ணில் புழு ஒன்று அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம்.
மனிதர்களிடம் ஒட்டுண்ணியாக வாழும் குணம் கொண்ட Gnathostoma spinigerum வகுப்பைச் சேர்ந்த புழு, இந்தியரின் கருவிழியில் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், எப்படி கண்ணில் புகுந்தது என்பதை ஆராயத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட நபரிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கியவர்கள், அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு தான் என்பதை இறுதியில் கண்டறிந்தனர்.
உயிருக்கே ஆபத்தை என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் புழுவை அகற்றினர். ஆனால், பாதிக்கப்பட்ட நபருக்குக் கண்பார்வை திரும்பியதாகத் தெரியவில்லை.
மூளையைக் குடையும் குணமுடைய புழுவின் பாதிப்பைச் சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் தங்கள் மூளையைக் கசக்கியபடி உள்ளனர்.