உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையில் போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இப்போதைக்குப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரவில்லை.
அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து,வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தமுறை கோட் சூட் அணிந்து வந்த ஜெலன்ஸ்கியிடம் இறுக்கம் தளர்ந்து, நட்பு தெரிந்தது நல்ல சகுனமாகவே பார்க்கப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரிட்டன் முன்வைத்தது.
உக்ரைனில் அமைதியை உறுதிப்படுத்தக் கூட்டு ராணுவ வீரர்களை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியது. உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என்று ஜெர்மனி கோரிக்கை வைத்தது. எனினும், எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் புதினுடன் முத்தரப்பு சந்திப்பை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும்,முத்தரப்பு சந்திப்பு ஒப்புக் கொள்ளப்பட்டால், கைதிகள் பரிமாற்றங்களும் இருக்கும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தைக்கு நடுவே ரஷ்ய அதிபர் புதினுடன் சுமார் 40 நிமிடங்கள் தொலைப்பேசியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார் என்று கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை. அதுகுறித்து ரஷ்யாவும் எந்த விவரங்களையும் வெளியிட வில்லை. இந்நிலையில், இன்னும்,15 நாட்களுக்குள் ஜெலென்ஸ்கியை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டதாக ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேலாக அமெரிக்க ஆயுதங்களை உக்ரைன் வாங்க உள்ளதாகக் கூறிய ஜெலன்ஸ்கி, அதற்கு ஐரோப்பா நிதியளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறினாலும், அவை என்ன என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் களமிறங்குமா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என நேரடியாக எந்த பதிலும் கூறாத ட்ரம்ப், உக்ரைனுக்கு அமெரிக்கா எதையும் கொடுக்கவில்லை,மாறாக அமெரிக்கா ஆயுதங்களை விற்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தச் சூழலில்,பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையில், உக்ரைனுக்கான 30 ஆதரவு நாடுகள் ஆலோசனை நடைபெறும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.