காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையர்கள் உரிய விளக்கமளித்திருக்கும் நிலையில், தனது பங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏழு கேள்விகளை எழுப்பியிருந்தார். முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளையும், அதற்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்திருக்கும் பதிலையும் தற்போது பார்க்கலாம்.
1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும் எப்படி தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, கணக்கெடுப்பின் போது தவறு நடந்திருந்தால் அதனைச் சுட்டிக்காட்டத் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கிய போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென குற்றம் சாட்டுவது ஏன் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டார்களா ? எனவும் 18 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தரவுகள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, ஒவ்வொரு முறையும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் வயது வாரியாக புதிய வாக்காளர் விவரம் வெளியிடப்படுவதோடு, அது தொடர்பான முழு விவரங்களும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுவது குறித்து முதல்வருக்குத் தெரியாதா ? எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்
3. வாக்காளர் பதிவுச் சட்டம் 1960ன் கீழ் கொடுக்கப்பட்ட விசாரணைக்கான காலவரைமுறையால் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கும் வாய்ப்பு உள்ளதைத் தேர்தல் ஆணையம் எப்படித் தீர்க்கப்போகிறது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் கூறுவது போல எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
4. பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கலைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா என மு.க.ஸ்டாலின் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, எந்த குறையாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு ஆதாரத்துடன் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
5. கடந்த மே 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, மறைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையிட்டதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்ற முதலமைச்சரின் கேள்விக்கு, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், தற்போது மீண்டும் அதையே செய்யச் சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தாதா ? எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்கத் தேர்தல் கமிசனை தடுப்பது எது? என்ற மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, ஆதார் அட்டையை 12 வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என்பதில் தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் இந்த கேள்வியே தேவையற்றது எனப் பதில் அளித்துள்ளனர்.
7. நியாயமான தேர்தல்கள் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்கு என்றால் அதனை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தலாமே என்ற மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, அனைத்து கட்சி முகவர்களின் ஒப்புதலுடன் தான் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் தான் நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.