மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் எனத் தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி சார்ந்த தூய்மை பணிகளில் தனியார் மயத்தைப் புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு அரசாணை 62 (31)-ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், அவர்லேண்ட் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் அவர்லேண்ட் நிறுவனம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் தொழிற்சங்க பிரதிநிதிகள் காத்திருந்தும், மாநகராட்சி மற்றும் அவர்லேண்ட் நிறுவனம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்க நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வராமல் தங்களைக் காக்க வைத்ததாக வேதனை தெரிவித்தனர். மேலும், இதுவரை உடன்பாடு ஏற்படாததால் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.