அலாஸ்காவில் வசிக்கும் நபருக்கு பைக் பரிசளித்து அமெரிக்க மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். எதிரி நாட்டை சேர்ந்தவர் மேல் ஏன் இந்த திடீர் கரிசணம்… விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நீடித்திருக்க, அதற்கு முடிவு கட்ட நினைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விளாடிமிர் புதினை அலாஸ்கா அழைத்திருந்தார்.
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்தை எடுபடாமல் போக, போர் நின்று விடாதா? என்ற கேள்வி தொடர்ந்து நீடிக்கிறது . இதனிடையே, அலாஸ்கா மாகாணத்தின் ஆங்கரேஜ் நகரத்தை சேர்ந்த ஒருவருக்கு பைக் பரிசளித்து திக்குமுக்காட வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
புதின் பேச்சுவார்த்தைக்காக ஆங்கரேஜ் நகருக்கு சென்றிருக்க, அதனை ஒளிபரப்புவதற்காக ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஊழியர்களும் அங்கு சென்றனர். அமெரிக்க அரசின் ஏற்பாடுகளை ஒளிபரப்பிய அவர்கள், அங்கு பழமையான உரல் ரக பைக் சென்றதை பார்த்து அதனை விடாது படம் பிடித்தனர். ரஷ்ய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பைக் என்பதும் அதற்கொரு அடிப்படை காரணம்.
பின்னர், பைக் உரிமையாளரான மார்க் வாரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, வாகனத்திற்கான பாகங்கள் கிடைப்பதே அரிதாகி விட்டதாகவும், பராமரிப்பதற்கென்றே பெரும் பணம் செலவாவதாகவும் கவலையைப் பகிர்ந்து கொண்டார். உரல் ரக பைக்குகளுக்கு உக்ரைனில் இருந்து மட்டுமே பாகங்கள் வாங்க முடிவதாகவும், ரஷ்யா- உக்ரைன் போரால் அது தடைப்பட்டுள்ளதாகவும் ஆதங்கப்பட்டார்.
இதுதொடர்பான காணொலி ரஷ்ய அதிபர் புதின் கவனத்திற்குச் செல்ல, பைக் பிரியரான புதின், மனம் நொந்து போனராம். மார்க் வாரன் இனியும் கஷ்டப்படக்கூடாது என நினைத்த புதின், புதிய உரல் பைக்கை மார்க் வாரனுக்கு பரிசளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மார்க் வாரன் தங்கியிருந்த விடுதி வாசலுக்கு ஜுட் விட்ட அதிகாரிகள், அவரிடம் புதிய உரல் ரக பைக்கை ஒப்படைத்து வாயடைத்துப் போகச் செய்தனர். புதின் செயலால் மனம் நெகிழ்ந்து போன மார்க் வாரன், உரல் பைக்கை எடுத்துக்கொண்டு ஆங்கரேஜ் முழுவதும் வலம் வருகிறார்.
காலகாலமாக எதிரி நாடாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவருக்கு பைக் பரிசளித்த ரஷ்ய அதிபரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.