கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. ஏற்கனவே இயங்கிவந்த மாநகராட்சி வளாகத்திலேயே பாஸ்போர்ட் அலுவலகத்தை மாற்ற வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து விதமான பணிகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருப்பு அறை, குடிநீர் மற்றும் கழிவறை என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
முக்கிய ஆவணங்களுடன் வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் அமைந்திருக்கும் மண்டல அலுவலக அறையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அறையிலும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அமரக் கூட வழியின்றி வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.
பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனத்தை நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான இடம் இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடமில்லாமல் இருப்பதால் சாலைகளிலேயே நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை நகருக்கு மிக நீண்ட தூரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருவதால் கூடுதல் சிரமம் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை தண்டுமாரியம்மன் கோவில் எதிரே இருக்கும் மாநகராட்சி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே ஆவணங்கள் சரிபார்ப்பு, புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டால் பயண தூரம் குறையும் என்பதோடு பயனாளர்களுக்குத் தேவையான வசதிகளும் எளிமையாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்திலேயே இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.