இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இந்தியப் பொருட்களை அதிகளவில் வாங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உக்ரைன் போரைக் காரணம் காட்டி உலக நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. ரஷ்யாவுடன் யாரும் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, மீறுபவர்களுக்கு அதிக வரி விதித்து வருகிறது.
அதிகபட்சமாக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வரி விதிப்பால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில்தான், தன்னிடம் வர்த்தகம் செய்வதால் பாதிப்பைச் சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவ ரஷ்யா முன்வந்துள்ளது.
இது குறித்து டெல்லியில் பேசிய ரஷ்யத் தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின்(Roman Babushkin), அமெரிக்காவிற்கு இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை ஏற்பட்டால், அப்பொருட்களை வாங்க தாங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் நவகாலனித்துவ போக்கை கடைப்பிடித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம் நியாயமற்றது என்றும், ஒருதலைபட்சமானது என்றும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக இந்தியா தங்களிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைத்துக்கொள்ளும் என நினைக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், இந்தியா தங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா இறக்குமதியை நிறுத்திக்கொள்வதாக வைத்துக்கொண்டாலும், அது மேற்கத்திய நாடுகள் உடனான சுமூக உறவுக்கு வழிவகுக்காது எனவும் ரஷ்யத் தூதரக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில் அது மேற்கத்திய நாடுகளின் இயல்பு அல்ல என்பதை அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகள் உங்களை விமர்சித்தால், நீங்கள் அனைத்தையும் சரியாகச் செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம் எனவும் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார்.
அண்மையில் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக கூட்டாளியாக அமெரிக்காதான் இருந்து வந்தது. ஆனால், ட்ரம்ப் எடுத்து வரும் தவறான முடிவுகளால் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ரஷ்யா மாறி வருகிறது.