40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?… அத்தகைய உயரத்தில் தான் பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..
சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க நாடாக இந்தியா வலம் வர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது விண்வெளித்துறையில் நாம் படைத்திருக்கும் சாதனை. வல்லரசு நாடுகள் கூட படைக்க முடியாகச் சாதனையை எல்லாம் இந்தியா சர்வசாதாரணமாக படைத்திருக்கிறது.
ராக்கெட் ஏவுவதில் கூட சில நாடுகள் தோல்வி காணும் நிலையில், அதனையெல்லாம் சாதாரணமாக கடந்து நிலவு வரை இந்தியா கால் பதித்துள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் திறனை அறிந்த சர்வதேச நாடுகள், அவர்களுடைய செயற்கைக்கோள்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அளவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இந்தியா கைவசம் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அசாத்திய திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 35 கிலோ எடையுள்ள செயற்கைகோள் மட்டுமே புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அது படிபடியாக உயர்ந்து 75 ஆயிரம் கிலோவாக மாற உள்ளது.
ஆம் அதற்குத் தான், 40 அடுக்குமாடி குடியிருப்பு உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட்டை தயாரிக்கும் பணியல் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி.நாராயணன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தகவல் தொடர்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்புக்காக மொத்தம் 55 செயற்கைகோள்கள் விண்வெளியில் வலம் வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக உயரும் எனத் தெரிவித்துள்ளது.
75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பிரமாண்ட ராக்கெட் தயாரிக்கும் திட்டம் வெற்றி பெற்று விட்டால், விண்வெளி துறையின் ராஜாவாக இந்தியா வலம் வருவதில் சந்தேகமில்லை என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.