பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் முதல் டாஸ்மாக் முறைகேடு வரை திமுக கூட்டணியின் ஊழல் முறைகேடுகளைக் கருத்தில் கொள்ளும்போது மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.
ஊழல்வாதிகளைப் பாதுகாப்பது திமுக கூட்டணியின் இயல்பாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், புதிய மசோதா ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர்,
மக்களின் நீண்ட கால கோரிக்கை இந்த மசோதா மூலம் நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மசோதா சட்டமாகிவிட்டால் இனி தங்கள் விருப்பத்திற்கு நீதியை வளைக்க முடியாது என்பது உங்கள் உண்மையான கவலையா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.