போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதலாகவும், ஏவுகணைகளின் எண்ணிக்கையில் எட்டாவது பெரிய தாக்குதலாகவும் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிகப் பெரிய ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பினராக நீண்டகாலமாகவே உக்ரைன் முயற்சி செய்து வருகிறது. ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் சேர உக்ரைன் துடித்ததால் அந்நாட்டின் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு போர் தொடுத்தது.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
இது ட்ரம்ப் போரல்ல -பைடன் போர் என்று அறிவித்த ட்ரம்ப், அமெரிக்காவை இந்த சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பதே தனது குறிக்கோள் என்று வலியுறுத்தினார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக கூறிய ட்ரம்ப், தான் யாருடைய பக்கத்திலும் இல்லை. கொலையை நிறுத்த விரும்புவதால் மனிதகுலத்தின் பக்கம் இருக்கிறேன் என்று கூறினார்.
உக்ரைன் அதிபரை ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துகடிந்து கொண்டார். மாஸ்கோவை குறிவைக்கக்கூடாது என்று கூறினார். உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தினார்.
ரஷ்யா குறித்து மென்மையான தொனியில் கருத்து தெரிவித்த டிரம்ப், திடீரென்று புதின் மீது தான் ஏமாற்றமடைந்துள்ளதாக அறிவித்தார்.
மேலும், 50 நாட்களுக்குள் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் 100 சதவீதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
உடனடியாக, பல பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க ஆயுதங்கள் நேட்டோ நட்பு நாடுகளுக்கு அனுப்பப்படும் என்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜூலை 4ஆம் தேதி, ஜெலன்ஸ்கியைத் தொடர்பு கொண்ட ட்ரம்ப், ரஷ்யா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, மாஸ்கோவைத் தாக்க முடியுமா? உங்களால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் தாக்க முடியுமா?” என்று நேரடியாகவே ட்ரம்ப் கேட்டதாகவும், அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்தால் தாக்குவதாக ஜெலன்ஸ்கி சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், எந்த வித போர் நிறுத்தமும்,அமைதி ஒப்பந்தமும் ஏற்படாமல் அலாஸ்காவில் புதினுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து வெள்ளைமாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப்.
இந்நிலையில், உக்ரைன் மீது பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. 574 ட்ரோன்கள் மற்றும் 40 குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
மேற்கு உக்ரைனில் உள்ள ஐந்து நகரங்களையும் தொழில்துறை நகரமான Zaporizhzhia சபோரிஜியாவையும் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள இந்த நகரங்களில் தாம் மேற்கத்திய நட்பு நாடுகளால் வழங்கப்படும் இராணுவ ஆயுதங்கள் சேமிக்கப் படுகின்றன.
ஹங்கேரிய எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Mukachevo முகச்சேவோ நகரில் அமெரிக்காவுக்குச் சொந்தமான முன்னணி மின்னணு உற்பத்தி தொழிற்சாலையும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.
எதுவும் மாறாதது போல் இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளதாகவும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் ரஷ்யாவிடம் இல்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி (Andriy Yermak) ஆண்ட்ரி யெர்மக், அமைதியைப் பற்றிப் பேசும் புதின் அதை அடைய ஒரு படி கூட எடுத்துவைக்கவில்லை என்றும், உண்மையான தீர்வுகளுக்குப் பதில், உக்ரைன் பொதுமக்கள் மீது புதின் தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜனவரியில் போயிங் உட்பட பிற அமெரிக்க வணிகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்கியுள்ளது என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ரஷ்யாவைத் தாக்குவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஜெலன்ஸ்கி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ரஷ்யா மீது முழு அளவிலான படையெடுப்புக்குப் பின், புதினுடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி தயாராவார் என்று கூறப்படுகிறது.
பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறிய ட்ரம்ப், இப்போது மாஸ்கோவை தாக்க உக்ரைனுக்குத் துணை போவார் என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தோல்வியில் முடிந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் உக்ரைன்- ரஷ்யா போர் மேலும் கவனத்தைப் பெற்றுள்ளது.