பிரான்சுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது. பாதுகாப்பு துறையில் மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த நடவடிக்கை குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ரகசிய’ என்று பொருள். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்குச் சிக்காமல் எதிரி நாட்டுக்குள் ஊடுருவிச் செல்லக் கூடியவை ஸ்டெல்த் போர் விமானங்கள் எனப்படுகிறது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பட்டியலில் சேர இந்தியாவும் தயாராகி வருகிறது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து,கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த இந்தியன் ஏர் ஷோவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் மாதிரியை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒற்றை இருக்கை, இரட்டை என்ஜின் கொண்ட போர் விமானமாக இருக்கும் என்றும், 2035ம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், ஆரம்பத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்தையும் இந்தியா செயல்படுத்த தொடங்கியுள்ளது.
எதிர்கால போர் விமானங்களுக்கான 100 சதவீத முழு தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் 120kN போர் ஜெட் என்ஜின்களை பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனத்துடன் இணைந்து DRDO தயாரிப்பதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. சுமார் 70,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு மைல்கல் ஆகும்.
ஏற்கெனவே, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல், புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மற்றும் ஒரு பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி வசதி என இந்திய பாதுகாப்புத் துறை நவீனமாகி வருகிறது.
முன்னதாக, கடற்படைக்காக 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை பிரான்சின் டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன.
2013-14 ஆம் ஆண்டில் வெறும் 686 கோடி ரூபாயாக இருந்த இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி, 2024-25 ஆம் ஆண்டில் 23,622 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 35 மடங்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 100 நாடுகள் இந்தியாவின் இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்கின்றன.
நடப்பு ஆண்டில், 30,000 கோடி ரூபாய்க்கும்,அடுத்த நான்காண்டுகளில் 50,000 கோடி ரூபாய்க்கும் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி இருக்கும் என்று கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் 40,000 கோடி ரூபாயாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, கடந்த ஆண்டு 1.5 லட்சம் கோடி யைத் தொட்டது. நடப்பாண்டில், இது 2 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 48,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 83 விமானங்களுக்கான ஆர்டரைப் பெற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், 97 தேஜாஸ் போர் விமானங்கள் தயாரிப்புக்கு சுமார் 66,000 கோடி ரூபாய்க்கான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் கணிசமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 2.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பாதுகாப்பு பட்ஜெட், 2024-25 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவது பிரதமர் மோடி அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. பாதுகாப்பு வலிமையாக இருக்கும்போது, நாட்டின் வளர்ச்சி தடையின்றி இருக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.